நடுரோட்டில் வாலிபர் குத்திக் கொலை
|பெங்களூருவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் வைத்து வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புட்டேனஹள்ளி:
குடிபோதையில் தகராறு
கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 23). இவர், கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் பெங்களூரு புட்டேனஹள்ளி பகுதியில் வசித்து வந்தார். பசவராஜின் நண்பர் அபிஜித். நேற்று முன்தினம் இரவு பசவராஜிம், அபிஜித்தும் வெளியே புறப்பட்டு சென்றார்கள். பின்னர் புட்டேனஹள்ளியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று 2 பேரும் மதுஅருந்தினார்கள்.
குடிபோதையில் 2 பேருக்கும் மதுபான விடுதியில் வைத்து தகராறு உண்டானது. உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்படி, 2 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். சித்தலிங்கேஷ்வரா தியேட்டர் முன்பாக ரோட்டில் வைத்து மீண்டும் பசவராஜ், அபிஜித் இடையே வாக்குவாதம் உண்டானது.
வாலிபர் குத்திக் கொலை
வாக்குவாதம் முற்றவே திடீரென்று ஆத்திரமடைந்த அபிஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பசவராஜை சரமாரியாக குத்தினார். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்து அபிஜித் ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் புட்டேனஹள்ளி போலீசார் விரைந்து வந்து பசவராஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பசவராஜை, அபிஜித் கொலை செய்திருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அபிஜித்தை வலைவீசி தேடிவருகிறார்கள்.