< Back
தேசிய செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மோதல்: கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை
தேசிய செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மோதல்: கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை

தினத்தந்தி
|
9 Oct 2023 6:45 PM GMT

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மேலும் தடுக்க வந்த அவரது தாய் மற்றும் நண்பருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 20). அவரது பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி விநாயகர் சிலையை சீனிவாஸ் உள்பட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பலர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சீனிவாசுக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே ஊர்வலத்தின்போது நடனமாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அப்போது சீனிவாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது.

அந்த சமயத்தில் சீனிவாஸ் மற்றும் அவரது நண்பர் ரஞ்ஜித் ஆகிய 2 பேர் மீது அந்த கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், சீனிவாசை கத்தியால் குத்தினார்.இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தடுக்க வந்த அவரது நண்பர் ரஞ்சித்திற்கும், சீனிவாசின் தாய்க்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக ஆடுகோடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சீனிவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அதே பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்ததும், அப்போது, சீனிவாசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் 2 பேருக்கும் இடையே நடனமாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதும், இந்த முன்விரோதத்தில் சீனிவாசை ரவுடிகள் 2 பேரும், கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை குத்திக்கொன்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரவுடி மற்றும் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலத்தில் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்