துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி; நண்பர்கள் 3 பேர் கைது
|குஷால்நகரில் வனப்பகுதியில் வேட்டையாட சென்றபோது கைதவறி நாட்டு துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடகு;
வாலிபர் மாயம்
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா நஞ்சராயப்பட்டணா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட விருபாக்சபுராவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் (வயது 29). கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. வினோத்தின் மனைவி அவரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து குஷால்நகர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். அப்போது வினோத்துடன், அதே கிராமத்தை சேர்ந்த தர்மா, யோகேஷ், ஈஸ்வரா ஆகியோர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடியபோது யோகேஷ், ஈஸ்வரா ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். தர்மா மட்டும் கிராமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
குண்டு பாய்ந்து சாவு
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதற்கிடையில் அவர்கள் வேட்டையாடுவதற்கு சென்ற இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பாளுகோடு என்ற ஆற்றில் வினோத்தின் உடல் மிதந்து கொண்டிருந்தது. அதை பார்த்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனையில் வினோத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தலைமறைவாக இருந்த யோகேஷ் மற்றும் ஈஸ்வரா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது:- அதாவது சம்பவத்தன்று வினோத், தர்மா, யோகேஷ், ஈஸ்வரா ஆகியோர் ஒன்றாக வேட்டையாடுவதற்கு சென்றிருந்தனர். அப்போது ஈஸ்வரின் கையில் இருந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த குண்டு வினோத்தின் நெஞ்சு பகுதியை துளைத்தது. இதில் பலத்த காமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நண்பர்கள் 3 பேர் கைது
இதையடுத்து உடலை வீட்டிற்கு கொண்டு வருவதற்காக தூக்கி வந்தனர். பாளுகோடு ஆற்றை கடக்க முயன்றபோது, உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால், அதை மீட்க முடியாமல் போனது. இதையடுத்து உடலை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.