நிலத்தகராறில் வாலிபர் வெட்டி கொலை
|கலபுரகி அருகே நிலத்தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் காலகி தாலுகா அரனகல் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சவுகான் (வயது 25). இவர் மராட்டிய மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். ஆனந்துக்கும், அரனகல் தாண்டாவை சேர்ந்த ஜாதவ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு ஆனந்த் வந்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்த்தை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்ததும் காலகி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஆனந்த்தின் தந்தை அளித்த புகாரின்பேரில் காலகி போலீசார் ஜாதவ் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். உயிரிழந்த ஆனந்த்துக்கு திருமணம் முடிந்து மனைவியும், பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தை உள்பட 3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.