தற்கொலை செய்ய கிணற்றில் குதிக்க முயன்ற வாலிபர்; தடுத்த முதியவரை இரும்புகம்பியால் தாக்கினார்
|சாகர் அருகே தற்கொலை செய்ய கிணற்றில் குதிக்க முயன்ற வாலிபரை தடுத்த முதியவரை இரும்புகம்பியால் தாக்கினார்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூவ்(வயது 35). இவர், நேற்றுமுன்தினம் அதேப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை அந்தவழியாக சென்ற சேஷகிரிபட்டீல்(வயது 67) என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர், ராஜீவ்வை தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினார். ஆனால் ராஜீவ், சேஷகிரி பட்டீலிடம் தற்கொலை செய்யபோவதாகவும், தயவு செய்துவிடும்படி கூறியுள்ளார். அப்போது சேஷகிரி பட்டீல், ராஜூவுக்கு புத்திமதி கூறியுள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜூவ், சேஷகிரிபட்டீலை அங்கு கிடந்த இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சேஷகிரிபட்டீலை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.