< Back
தேசிய செய்திகள்
கொள்ளேகால் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு
தேசிய செய்திகள்

கொள்ளேகால் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
25 Sept 2023 1:41 AM IST

கொள்ளேகால் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளேகால்:-

விநாயகர் சிலை கரைப்பு

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பஸ்திபுரா பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அந்தப்பகுதி மக்கள் வழிபட்டனர். தினமும், விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில், அந்த விநாயகர் சிலையை நேற்று முன்தினம் கரைக்க அந்தப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் பஸ்திபுரா கிராமத்தில் விநாயகர் சிலையை மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் பஸ்திபுரா அருகே செல்லும் கபினி கால்வாயில் அந்த விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்றனர். அங்கு விநாயகர் சிலையை கரைத்தனர்.

வாலிபர் சாவு

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பவரும் கால்வாயில் இறங்கி விநாயகர் சிலையை கரைத்தார். அப்போது திடீரென்று அவர் கால்வாயில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பிரவீன்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் பிரவீன்குமார், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொள்ளேகால் புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த பிரவீன்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்