கள்ளத்தொடர்பை கைவிட்ட இளம்பெண் குத்திக்கொலை - கள்ளக்காதலனுக்கு எமனாக மாறிய பெண்ணின் தாய்
|தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகர் அருகே சாகாம்பரி நகரில் வசித்து வருபவர் கீதா. இவரது மகள் அனுஷா (வயது 25). இவருக்கும் கொரகுன்டே பாளையாவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சுரேஷ் விழா ஏற்பாட்டாளர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
வேலைக்கு செல்லும் போது கடந்த 5 ஆண்டுக்கு முன்பாக அனுஷாவுடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தாலும், அனுஷாவுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், சுரேசுடன் பேசி, பழகுவதை அனுஷா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரும் பேசலாம் என்று அனுஷாவை சுரேஷ் அழைத்ததாக தெரிகிறது. இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். அதன்படி, நேற்று மாலையில் ஜே.பி.நகர் அருகே உள்ள சாரக்கி பூங்காவுக்கு அனுஷா சென்றுள்ளார். அங்கு சுரேசும் வந்துள்ளார். மகள் வீட்டில் இருந்து திடீரென்று வெளியே புறப்பட்டு செல்வதை அறிந்த கீதாவும், பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில், சாரக்கி பூங்காவில் சுரேஷ், அனுஷா இடையே வாக்குவாதம் உண்டானது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அனுஷாவை குத்தியதாக தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த கீதா, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் கீழே விழுந்த அனுஷாவை தொடர்ந்து சுரேஷ் கத்தியால் குத்தியபடி இருந்துள்ளார். தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த சுரேஷ் மண்டை உடைந்து கீழே சுருண்டு விழுந்தார்.
இதற்கிடையே பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்ட அனுஷா ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பலியானார். அதுபோல், தலையில் காயம் அடைந்த சுரேசும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். இதுபற்றி ஜே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அனுஷா, சுரேஷ் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அனுஷாவின் தாய் கீதாவையும் பிடித்து விசாரித்தார்கள்.
அப்போது அனுஷாவுக்கும், சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சுரேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதால், அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட்டு விட்டு திருந்தி வாழ்வதற்கு அனுஷா முடிவு செய்துள்ளார். ஏனெனில் அனுஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த விவகாரம் போலீஸ் நிலையத்திற்கும் சென்று 2 பேருடனும் சமாதான பேச்சு வார்த்தையும் நடந்திருந்தது.
ஆனால் தன்னுடன் உள்ள கள்ளத்தொடர்பை தொடரும்படி சுரேஷ் வலியுறுத்தி வந்துள்ளார். கள்ளத்தொடர்பை தொடர அனுஷா மறுத்ததால், அவரை சுரேஷ் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. அதே நேரத்தில் சுரேசிடம் இருந்து தனது மகளை காப்பாற்றுவதற்காக, அவரது தலையில் கீதா கல்லால் தாக்கியதால் அவர் உயிர் இழந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த இரட்டை கொலை சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.