< Back
தேசிய செய்திகள்
வேறு நபரை திருமணம் செய்தால்.. காதலன் மிரட்டல் விடுத்ததால் இளம்பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

'வேறு நபரை திருமணம் செய்தால்..' காதலன் மிரட்டல் விடுத்ததால் இளம்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
24 Feb 2024 4:56 AM IST

இளம்பெண் தற்கொலை தொடர்பாக காதலன் அருணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஜிகனி,

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஜிகனி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 19 வயதில் சந்திரகலா என்ற மகள் இருந்தார். அவர் பி.யூ.சி. படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் அருண் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இதற்கிடையே சந்திரகலாவுக்கும், அருணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. அப்போது அருண் வீட்டினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சந்திரகலா கூறியதால் அவரது பெற்றோர் அருண் வீட்டில் சென்று திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி உள்ளனர். அப்போது சந்திரகலாவின் பெற்றோரை, அருண் குடும்பத்தினர் அவதூறாக பேசி திருப்பி அனுப்பினர்.

இதுபற்றி சந்திரகலா, அருணிடம் கேட்டுள்ளார். அப்போது தனது சகோதரிக்கு முதலில் திருமணம் செய்து வைத்த பிறகு தான் தனக்கு திருமணம் செய்யப்படும் என்றுள்ளார். மேலும் சந்திரகலாவை விட்டு விலக தொடங்கி உள்ளார். இதற்கிடையே அருணின் சகோதரிக்கு திருமணம் முடிந்தது.

அப்போதும் அருண், சந்திரகலாவை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே அருண் சிறை சென்றவர் எனவும், அவரது செயல்பாடுகள் சரியில்லை எனவும் சந்திரகலாவுக்கு அவரது பெற்றோர் அறிவுரை கூறி உள்ளனர். இதனால் மனம் மாறிய சந்திரகலா வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.

அதன்படி தங்கள் உறவுக்கார வாலிபர் ஒருவருடன் சந்திரகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதுபற்றி அருணிற்கு தெரியவந்தது. உடனே சந்திரகலாவை அடிக்கடி சந்தித்து பேசிய அருண், அவரை மிரட்டி உள்ளார். மேலும் திருமணத்தை நிறுத்தும்படியும், வேறு வாலிபரை திருமணம் செய்தால் கொன்றுவிடுவேன் என்றும் கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சந்திரகலா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சந்திரகலா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த சந்திரகலாவின் குடும்பத்தினர் கோனனகுன்டே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரகலாவின் உடலை மீட்டனர். மேலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜிகனி போலீசில், தங்கள் மகளை அருண் தான் மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அருண் மீது சந்திரகலாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள அருணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்