ஓடும் காரில் திடீர் 'தீ'; டிரைவர் உயிர் தப்பினார்
|பெங்களூரு அருகே ஓடும் காரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் டிரைவர் உயிர் தப்பினார்.
ஆனேக்கல்:
பெங்களூரு அருகே ஒசூர்-பெங்களூரு இடையே முக்கிய சாலையாக விளங்கும் அத்திப்பள்ளி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் கிரீஷ் காரை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் காரின் என்ஜின் பகுதியை திறந்து பார்க்க முயன்றார். அதற்குள் காரில் தீப்பிடித்துக் கொண்டது. அந்த தீ மளமளவென கார் முழுவதும் பரவி எரிந்தது.
இதனால் டிரைவர் கிரீஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினார். பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கார் பெங்களூரு யஷ்வந்தபுரத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமானதும், அவரது காரை ஒசூரைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக டிரைவர் கிரீஷ் ஓட்டிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.