கவனம் பெறும் நாட்டின் இளம் மேயர் ஆர்யாவின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்...!
|நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். சி.பி.எம் கட்சியை சேர்ந்த இவர் நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் மேயராக செயல்பட்டு வரும் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுசேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சச்சின்தேவுக்கும் வரும் 4-ம் தேதி காலை 11 மணிக்கு கட்சி அலுவலக அரங்கிலேயே திருமணமாக நடைபெற உள்ளது. நேரில் சென்று அழைப்பிதழ் தர முடியாதவர்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஆர்யா ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆரியா ராஜேந்திரனின் திருமண அழைப்பில், திருமணத்திற்கு வருவோர் தனக்கு அன்பளிப்பு தர வேண்டாம் எனவும், அவ்வாறு அளிக்க நினைத்தால் மாநகராட்சியின் கீழ் இயங்கும் காப்பகங்களிலோ, அல்லது கேரள முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கோ அன்பளிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருவரும் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சடித்துள்ளனர். வழக்கமாக திருமண அழைப்பிதழ்களில் விருந்தினர்களை அன்புடன் அழைப்பதாக மணமகனின் பெற்றோர் பெயரும், மணமகள் பெற்றோர் பெயரும் இடம்பெறும். ஆனால் ஆர்யா ராஜேந்திரனின் திருமண அழைப்பிதழிலும், சச்சின் தேவின் திருமண அழைப்பிதழிலும் அந்தந்த மாவட்ட சி.பி.எம் செயலாளர்கள் விருந்தினர்களை அழைப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.