பெங்களூருவில், 4-வது மாடியில் இருந்து சிறுமியை தூக்கி வீசி கொன்ற கல்நெஞ்ச தாய்
|பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து சிறுமியை கீழே தூக்கி வீசி கொன்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.
பெங்களூரு: பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து சிறுமியை கீழே தூக்கி வீசி கொன்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.
4-வது மாடியில் இருந்து....
பெங்களூரு சம்பங்கிராம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரண். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கிரணின் மனைவி சுஷ்மா. இவர் பல் டாக்டராக கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். இந்த தம்பதியின் மகள் துருதி (வயது 5). இந்த நிலையில் துருதி மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று தெரிகிறது. மேலும் துருதிக்கு பேச்சு வராது என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் துருதியை, சுஷ்மா தான் கவனித்து வந்து உள்ளார். துருதியை கவனித்து வந்ததால் சுஷ்மாவால் தனது பயிற்சியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக சுஷ்மா மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4-வது மாடிக்கு துருதியை அழைத்து சென்ற சுஷ்மா, 4-வது மாடியில் இருந்து துருதியை தூக்கி கீழே வீசினார்.
நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
பின்னர் சுஷ்மாவும் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் சுஷ்மாவை மீட்டனர். மேலும் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த துருதி பரிதாபமாக இறந்தாள். இதுபற்றி அறிந்ததும் சம்பங்கிராம்நகர் போலீசார் அங்கு சென்று துருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் துருதியை கவனித்து கொள்ள முடியாததால் அவளை 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி சுஷ்மா கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து சம்பங்கிராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்தனர். இதற்கிடையே துருதியை மாடியில் இருந்து சுஷ்மா தூக்கி வீசும் ெநஞ்சை பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருதியை கவனிக்க முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் கொண்டு சென்று சுஷ்மா விட்டுவிட்டு வீ்ட்டிற்கு வந்தார். பின்னர் துருதியை, அவளது தந்தை மீட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.