செலவுக்கு பணம் தராத தந்தையை கூலிப்படை வைத்து காலி செய்த மகன்
|சிறுவனான நயீமின் மகனை பிடித்து விசாரித்தபோது, 3 பேருக்கு ரூ.6 லட்சம் என பேரம் பேசி அவனுடைய தந்தையை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தியது தெரிய வந்தது.
பிரதாப்கார்,
உத்தர பிரதேசத்தின் பிரதாப்கார் நகரில் பத்தி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர் முகமது நயீம் (வயது 50) என்பவர் பைக்கில் வந்த நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை நடத்திய பின் அவர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு துர்கேஷ் குமார் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பியூஷ் பால், சுபம் சோனி மற்றும் பிரியன்ஷு ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் விசாரணையின்போது, நயீமை கொல்வதற்கு தங்களை கூலிப்படையாக அனுப்பியது அவருடைய 16 வயது மகன் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவனான நயீமின் மகனை பிடித்து விசாரித்தபோது, 3 பேருக்கும் ரூ.6 லட்சம் என பேரம் பேசி முன்பணம் ரூ.1.5 லட்சம் கொடுத்து அவனுடைய தந்தையை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தியது தெரிய வந்தது. நயீமை கொலை செய்த பின்னர் மீத தொகையை தந்து விடுவேன் என்று சிறுவன் அவர்களிடம் உறுதி கூறியிருக்கிறான்.
நயீம் அவருடைய மகனுக்கு வேண்டியபோது பணம் கொடுக்காமல், மறுத்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் மகன் இருந்துள்ளான். சிறுவன் தனக்கு தேவையானபோது, கடையில் இருந்து பணம் திருடுவது அல்லது வீட்டில் இருந்து நகைகளை திருடி செல்வது என்று அடிக்கடி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
கடந்த காலங்களிலும், நயீமை கொல்ல பல முறை அவருடைய மகன் திட்டமிட்டு இருந்திருக்கிறான். ஆனால், இது தோல்வியிலேயே முடிந்தது என்று போலீசார் தெரிவித்தனர். அந்த 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.