விளைநிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை
|கலசா அருகே விளைநிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை வாைழ, காபி, ஏலக்காய் போன்ற பயிர்களை நாசமாக்கியது. அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
காட்டுயானை அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா ஈச்சலகெரே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி விட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை, அந்தப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
நேற்று முன்தினமும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, அந்தப்பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த யானை அங்கிருந்த வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும், காபி செடிகளை மிதித்தும் நாசப்படுத்தியது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
மக்கள் கோரிக்கை
இந்த நிலையில் நேற்று காலை சந்துரு தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது பயிர்கள் நாசமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காட்டு யானை பயிர்களை நாசப்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் காட்டு யானையின் நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.