< Back
தேசிய செய்திகள்
விளைநிலத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை
தேசிய செய்திகள்

விளைநிலத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
4 Sept 2022 8:09 PM IST

மூடிகெரே அருகே விளைநிலத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்தது. அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு;

ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சக்திகேனஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் இருந்து இரைதேடி காட்டுயானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் கிராமத்துக்குள் வருகின்றது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வனப்பகுதியில் இருந்து இரைதேடி காட்டுயானை ஒன்று வந்துள்ளது. அந்த காட்டுயானை அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் ராஜப்பா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்து காபி, மிளகு, பாக்கு ேபான்ற பயிர்களை தும்பிக்கையால் முறித்தும், மிதித்தும் நாசப்படுத்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் நேற்று காலை லட்சுமணன் தனது தோட்டத்திற்கு சென்றுபாா்த்துள்ளார். இதில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை காட்டுயானை நாசப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கிராம மக்கள் கோரிக்கை

மேலும் இதுகுறித்து மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அவரது தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம், அந்த பகுதி மக்கள் காட்டுயானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை வைத்தனர்.

மேலும் காட்டுயானை நாசப்படுத்திய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் கூறினர். அதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்