பெங்களூருவில் ஒரே மழைக்கு சாலைகளில் குழிகள் ஏற்படும் நிலை; காங்கிரஸ் விமர்சனம்
|பெங்களூருவில் ஒரே மழைக்கு சாலைகளில் குழிகள் ஏற்படும் நிலை உண்டாகி இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கூறவில்லை
கல்யாண-கர்நாடக பகுதிகளில் உள்ள அரசு துறைகளில் காலியிடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் அங்கு அரசு பணிகள் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை விற்பனை செய்ய இந்த அரசுக்கு ஏதாவது ஆலோசனை உள்ளதா?. கல்யாண-கர்நாடக பகுதிக்கு துரோகம் இழைத்து வருவது ஏன்?. பண மதிப்பிழப்பு திட்டத்தால் கிடைத்த பலன்கள் என்ன என்பதை இதுவரை மத்திய அரசு கூறவில்லை.
போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், ஹவாலாவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்படுகின்றன. 2 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்தது ஏன் என்று புரியவில்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. ஒருவரே கேட்டுள்ளார். தமது சொந்த கட்சி எம்.பி.க்காவது மத்திய அரசு பதில் கூறுமா?. பாதுகாப்பு வழங்கும் போலீசாரே கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இது தான் பா.ஜனதாவின் சாதனை ஆகும்.
முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்
போலீஸ் துறையை கொள்ளை துறையாக மாற்றிய பெருமை மந்திரி அரக ஞானேந்திராவை சாரும். கர்நாடகத்தில் முதல் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அரசோ மக்கள் பயப்பட தேவை இல்லை என்று சொல்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், தற்போது பெய்து வரும் மழையால் வேகமாக பரவும் நிலை உண்டாகும். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜிகா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதாரத்துறை எந்த வகையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது?. பெங்களூருவில் ஒரே மழைக்கு சாலைகளில் குழிகள் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. இதற்கு பொறுப்பு யார்?. 40 சதவீத கமிஷன் தான் இதற்கு காரணம்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.