ஆந்திர பிரதேசத்தில் ஒரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்...? ஓராண்டு வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
|ஆந்திர பிரதேசத்தில் ஓராண்டு வாடகை பாக்கியை வசூலிக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்ற உரிமையாளருக்கு பேரதிர்ச்சி காத்திருந்து உள்ளது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் வீட்டு உரிமையாளர் ஒருவர், தனது வீட்டின் வாடகையை வசூலிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் இல்லை. வீடு பூட்டி கிடந்தது. பல மாதங்களாக வாடகை கொடுக்காத ஆத்திரத்தில் குடியிருந்தவர்களை காலி செய்யும் நோக்குடன் அவர் சென்றுள்ளார்.
இதனால், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்து உள்ளார். வீட்டின் அறை ஒன்றில் டிரம்மில் பல கூறுகளாக துண்டாடப்பட்ட பெண்ணின் பாதி அழுகிய சடலம் கிடந்தது கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக போலீசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் வந்து பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
வீட்டு உரிமையாளர் போலீசில் கூறும்போது, 2021-ம் ஆண்டு ஜூனில், வீட்டில் குடியிருந்த நபர், தனது மனைவி கர்ப்பிணியாக உள்ளார் என்றும் செலவுகள் நிறைய உள்ளன என்றும் கூறி வாடகையை தராமல் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார்.
இதன்பின்பு, மீண்டும் திரும்பி வந்து வீட்டின் பின்புறம் வழியே உள்ளே வந்துள்ளார் என கூறியுள்ளார். வாடகையை அவர் இன்னும் தரவில்லை. ஆளையும் காணவில்லை.
ஓராண்டாக, வாடகை தராத ஆத்திரத்தில் அதனை வசூலிக்க அவரை தேடி வீட்டு உரிமையாளர் வந்துள்ளார். வாடகை வசூலாகாத நிலையில், குடியிருப்பவரை காலி செய்வதற்காக, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். வந்த இடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு போன்று, இந்த உடல் ஓராண்டாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.