< Back
தேசிய செய்திகள்
நெஞ்சை அதிர வைக்கும் சம்பவம்; வாகன சோதனையில்...!! கார் டிக்கியில் வைத்து கடத்தப்பட்ட மாணவர் மீட்பு

Image Courtesy:  Zeenews

தேசிய செய்திகள்

நெஞ்சை அதிர வைக்கும் சம்பவம்; வாகன சோதனையில்...!! கார் டிக்கியில் வைத்து கடத்தப்பட்ட மாணவர் மீட்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:41 PM IST

உத்தர பிரதேசத்தில் போலீசாரின் வாகன சோதனையின்போது, கார் டிக்கியில் வைத்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆக்ரா,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் டகால் லேக் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்தது.

கார் ஒன்றில் சோதனையிட்டபோது, அதன் டிக்கியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாலிபர் ஒருவர் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து உஷாரான கந்தவுலி சுங்க சாவடியின் பொறுப்பாளர் ருத்ரபிரதாப் மற்றும் அவருடைய குழுவினர் உடனடியாக செயல்பட்டு, கடத்தல்கார்கள் இருவரையும் பிடித்தனர்.

கார் டிக்கியில் கிடந்தவர் இஷாந்த் அகர்வால் (வயது 19) என்பதும் அவர் புனே நகரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. அவர் மீட்கப்பட்டார். எனினும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை.

தொடர் விசாரணையில் கடத்தலுக்கான பின்னணி பற்றி தெரிய வந்துள்ளது. அவர், தசரா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர், நொய்டாவில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதற்காக கார் ஒன்றை புக் செய்திருக்கிறார்.

ஆனால், செல்லும் வழியில் பத்கல் பகுதியில் பெட்ரோல் போட காரை ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். அப்போது, மற்றொரு காரில் வந்த 2 பேர் மாணவரை கடத்தி சென்றனர். அவரை, தாயார் பிரியங்கா அகர்வால் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி உடனடியாக சுற்று வட்டார போலீசாருக்கு தகவல் பகிரப்பட்டது. டெல்லி-என்.சி.ஆர். உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஆக்ரா நகர கந்தவுலி காவல் நிலைய போலீசார் அடங்கிய குழு நடத்திய வாகன சோதனையில் இஷாந்த் மீட்கப்பட்டார். இஷாந்தின் கார் ஓட்டுநர் கடத்தல் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் ஓட்டுநர் ஆகாஷ் யாதவ் மற்றும் அவருடைய கூட்டாளி ஆஷிஷ் யாதவ் இருவரும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் வெடிபொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தசரா விடுமுறைக்கு ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்