காதலனுடன் ரகசிய திருமணம்... ஒரு மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி
|திருமணம் நடந்த பின்னர், ராஜாராம் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.
கோட்டா,
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் கோகதி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜாராம் தன்வார் (வயது 22). இவருக்கும் பாஞ்ச்பிப்ளி கிராமத்தில் வசித்த சுனிதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் வேண்டாம் என முடிவு செய்து அதனை ரத்து செய்து விட்டனர். எனினும், 2 பேரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இது காதலாக உருமாறியுள்ளது. இருவரும் சந்தித்து பேசி காதலை வளர்த்து உள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ந்தேதி இரண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி சென்று ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நிச்சயித்தபோது, மறுப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர், திருமணத்திற்கு பின்னர் அவர்களை ஏற்று கொண்டனர்.
இந்த தம்பதியின் திருமணத்திற்கு பின்னான வாழ்க்கை ஒரு மாதம் வரை சீராக சென்ற நிலையில், ராஜாராம் குடித்து விட்டு வீட்டுக்கு வருவது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ராஜாராம், தொலைபேசி வழியே இளம்பெண்ணின் தந்தையை தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம், இளம்பெண்ணை படுகொலை செய்த விவரங்களை கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசை தொடர்பு கொண்டார். இதுபற்றி தங்கிபுரா காவல் அதிகாரி சத்யநாராயண் கோச்சார் கூறும்போது, இருவருக்கும் திருமணம் நடந்த பின்னர், ராஜாராம் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது வழக்கம்.
தினமும் அந்த தம்பதி சண்டை போட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் ராஜாராம் வீட்டுக்கு வந்து, சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், கோபத்தில் ஆயுதம் ஒன்றை கொண்டு அவரை ராஜாராம் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த கொலைக்கு பின்னர், அவருடைய தந்தையை தொலைபேசியில் அழைத்து சம்பவம் பற்றி தெரிவித்து உள்ளார் என கோச்சார் கூறியுள்ளார். ராஜாராமுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.