சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
|உப்பள்ளி அருகே சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே ஹிரேசூர் கிராமத்தில் வசித்து வந்தவன் விசைத் பெலகலி(வயது 9). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சிறுவன் பெலகலி வழக்கம்போல் காலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்றான். மதிய உணவு இடைவெளியின்போது சிறுவன் பெலகலியும், அவனுடைய சக மாணவனான பிரஜ்வல்(10) என்ற சிறுவனும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கட்டிடத்திற்கான கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ஒரு பக்க சுவர் இடிந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பெலகலி, பிரஜ்வல் ஆகியோர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் பெலகலி சம்பவ இடத்திலேயே பலியானான். பிரஜ்வல் படுகாயத்துடன் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.