< Back
தேசிய செய்திகள்
கூட்டணிக்குள் விரிசலா...? காங்கிரசை கடுமையாக விமர்சித்த ஐக்கிய ஜனதா தள கட்சி
தேசிய செய்திகள்

கூட்டணிக்குள் விரிசலா...? காங்கிரசை கடுமையாக விமர்சித்த ஐக்கிய ஜனதா தள கட்சி

தினத்தந்தி
|
23 Jan 2024 9:08 PM IST

பீகார் கவர்னர் அர்லேகரை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியுடன் சென்று நிதிஷ் குமார் சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

பாட்னா,

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் தீவிர பணியில் முக்கிய நபராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் செயல்படுகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து, ஆலோசனைகளையும் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, இந்தியா கூட்டணி உருவானது.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் அரசியல் ஆலோசகரான கே.சி. தியாகி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்தியா கூட்டணியை வழிநடத்தி செல்வதிலும், தேவையான வலிமையை கூட்டணிக்கு வழங்குவதிலும் இருந்து காங்கிரஸ் படுதோல்வியடைந்து விட்டது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2022-ம் ஆண்டு ஆகஸ்டில், பா.ஜ.க.வை கைவிட்டு விலகிய நிதிஷ் குமார், பின்பு அனைத்து எதிர்க்கட்சியினரையும் சந்தித்து, ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதனுடன், காங்கிரஸ் இன்றி எந்தவொரு கூட்டணியும் சாத்தியமில்லை என்றும் அவர் சுட்டி காட்டியது கவனிக்கத்தக்கது.

இதன்பின், 2023-ம் ஆண்டு ஜூனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டமொன்று பாட்னா நகரில் நடந்தது. தொடர்ந்து, பெங்களூரு மற்றும் மும்பையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனை குறிப்பிட்டு பேசிய தியாகி, கடைசியாக நடந்த மும்பை கூட்டத்திற்கு பின்னர் எதிர்க்கட்சி கூட்டணியில் கடந்த 4 மாதங்களாக எந்தவொரு செயல்பாடுகளும் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அனைத்து முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களின் ஒப்புதலுடனேயே, மக்களவை தேர்தலுக்கு பின்பு பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சூழலில், டெல்லியில் நடந்த தொடர்ந்து, இந்தியா கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேவை பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்மொழிந்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பீகார் கவர்னர் அர்லேகரை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியுடன் சென்று நிதிஷ் குமார் சந்தித்தது அரசியலில் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் கோரி, தொகுதி பங்கீட்டில் முழுமையான முடிவு எட்டப்படாமல் காணப்படுவதும் அரசியல் அரங்கில் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்