< Back
தேசிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு: பா.ஜனதா கூறும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி - சித்தராமையா பேச்சு
தேசிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு: பா.ஜனதா கூறும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி - சித்தராமையா பேச்சு

தினத்தந்தி
|
7 Nov 2022 4:37 AM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பா.ஜனதா கூறி வரும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

அனைவரும் ஒற்றுமை

காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று சர்வோதயா மாநாடு நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது 7 கோடி கன்னடர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். அதே நேரத்தில் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ஊழல் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

பா.ஜனதா தவறிவிட்டது

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசை மக்கள் வெளியேற்றுவாா்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆனாலும் விவசாயிகள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா தவறிவிட்டது. 40 சதவீத கமிஷன் பெறுவதாக பா.ஜனதா அரசு மீது ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் 40 சதவீத கமிஷனால் தற்கொலை செய்து கொண்டார். லஞ்சம் காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் என்பவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து மந்திரி எம்.டி.பி.நாகராஜ் பேசும்போது கூறியுள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதற்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

பணக்கார அரசியல்

கர்நாடகத்தில் விவசாயிக்ள, ஏழைகள், சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. பழிவாங்கும் அரசியல், ஊழல் தான் நடக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பழிவாங்கும் அரசியல், பணக்கார அரசியல் செய்து பழக்கம் இல்லை. ஏழைகளுக்கு ஆதரவாக, புத்தர், பசவண்ணர், அம்பேத்கர் கொள்கைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அரசியல் செய்து வருகிறார்.

அவர் ஒரு சுயமரியாதை அரசியல்வாதி. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பா.ஜனதாவுக்கு சரியான பதிலடியை காங்கிரஸ் வழங்கியுள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்