உடுப்பியில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைதாக்கிய 4 பேர் சிக்கினர்
|உடுப்பியில் பெட்ேரால் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடுப்பி
பெட்ரோல் விற்பனை நிலையம்
உடுப்பி மாவட்டம் படுபித்ரி டவுனில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நித்தேஷ் (வயது 32) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை கஞ்சி நடுக்கா பகுதியை சேர்ந்த அப்துல் ரகிம் மற்றும் அவரது மகன் முகமது பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு இருந்த நித்தேசிடம் பாட்டிலில் பெட்ரோல் வேண்டும் என கேட்டனர். அப்போது நித்தேஷ் அவர்களிடம் பாட்டில் கேட்டார். ஆனால் அவர்களிடம் பாட்டில் இல்லை.
பாட்டில் கொண்டு வந்து பெட்ரோல் வாங்குங்கள் என நித்தேஷ் அவர்களிடம் கூறினார். இதையடுத்து அருகில் கிடந்்த 1 லிட்டர் பாட்டிலை முகமது எடுத்து நித்தேசிடம் பெட்ரோல் நிரப்ப கூறினார். அவர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பினார். அப்போது பாட்டிலில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் கீழே கொட்டியது. இதனால் நித்தேஷ் மற்றும் முகமதுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சரமாரியாக தாக்கினர்
இதையடுத்து அப்துல் ரகிம், முகமது ஆகிய 2 பேர் அங்கிருந்து சென்றனர். பின்னர் அப்துல் ரகிம் மற்றும் முகமது தனது நண்பர்கள் மசூது, சிராஜ், அசீர் ஆகியோருடன் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் நித்தேசை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களை தாக்க முயன்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நித்தேசை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து படுபித்ரி போலீசில் நித்தேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
மேலும் ேபாலீசார் பெட்ரோல் விற்பனை ஊழியரை தாக்கிய 5 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் அப்துல் ரகிம், முகமது, மசூத், சிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அசீரை படுபித்ரி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.