< Back
தேசிய செய்திகள்
பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க பிளாட்டுக்கு சென்ற நபருக்கு அடி, உதை; பல லட்சம் பறிப்பு
தேசிய செய்திகள்

பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க பிளாட்டுக்கு சென்ற நபருக்கு அடி, உதை; பல லட்சம் பறிப்பு

தினத்தந்தி
|
12 Jan 2023 4:26 PM IST

குஜராத்தில் சமூக ஊடகம் வழியே பழகிய பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க பிளாட்டுக்கு சென்ற நபருக்கு அடி, உதை கிடைத்ததுடன், பல லட்சம் பணமும் பறிபோனது.

சூரத்,

குஜராத்தின் சூரத் நகரில் வராச்சா பகுதியை சேர்ந்த நடுத்தர வயது நபர் ஒருவர் சமூக ஊடகம் வழியே பழகிய பெண்ணால் அடி, உதைக்கு ஆளானதுடன் பல லட்சம் பணமும் அவரிடம் இருந்து மிரட்டி பறிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி உதவி காவல் ஆணையாளர் டி.கே. பட்டேல் கூறும்போது, அந்த நபர் பெண் ஒருவரை சமூக ஊடகம் வழியே நட்பு கொண்டுள்ளார். இருவரும் சில நாட்களாக சாட்டிங் செய்து வந்துள்ளனர்.

நட்பு வலுவடைந்ததும், அந்த பெண் ஒரு பிளாட்டுக்கு வரும்படி அந்நபரை அழைத்துள்ளார். அந்த நபரும் ஹரிதம் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டுக்கு சென்றுள்ளார். அவரை அந்த பெண் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

இதற்காக அந்த நபர் தயாரானபோது, திடீரென 2 பேர் பிளாட்டுக்குள் நுழைந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்து நின்ற அந்த நபரிடம், போலீசாரை அழைத்து பாலியல் பலாத்கார புகார் அளிக்க போகிறோம் என அவரை மிரட்டியுள்ளனர். போலீசிடம் போகாமல் இருக்க ரூ.75 லட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டலும் விடுத்தனர்.

இதனால் பயந்து போன அந்த நபர், மனைவியின் நகையை விற்றும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் கிடைத்த தொகையை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து வேலைக்கு புறப்பட்ட அந்த நபரை, போலீசார் என கூறி கொண்டு 2 பேர் வழிமறித்து உள்ளனர்.

அவர்கள், புனே நகர போலீசார் என்றும், அந்நபருக்கு எதிராக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார் என தெரிவித்தனர். வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மிரண்டு போன அந்நபர் ரூ.9 லட்சம் தொகையை எப்படியோ கொண்டு வந்து கொடுத்து உள்ளார்.

எனினும், இந்த முறை உஷாரான அந்த பாதிக்கப்பட்ட நபர் வராச்சா காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இதன்பின்பு, போலீசார் விசாரணை நடத்தி 4 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5.74 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்