ஒரு தாயின் ஈடில்லா பாசம்... முதலையிடம் இருந்து குட்டியை காக்க போராடிய யானை; வைரலான வீடியோ
|நீர்நிலையில் முதலையிடம் இருந்து குட்டியை காக்க தாய் யானை போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
விலங்குகள், பறவைகள் என தாய்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இதேபோன்று, தனது குழந்தையை ஒரு தாய் பாதுகாப்பது போன்று வேறு யாரும் அதிக அக்கறை எடுத்து கொள்வது இல்லை. அந்த வகையில் இந்திய வன பணி அதிகாரியான சுசந்தா நந்தா வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதில், வெயிலின் கொடுமையில் நீர்நிலைக்கு தனது குட்டியுடன் தாய் யானை ஒன்று நீர் அருந்த வருகிறது. பின்னர், வெப்பம் தணிய நீரை தனது மேலே அள்ளி கொட்டுகிறது. அதன் குட்டியும் நீரில் படுத்து ஓய்வெடுக்க தொடங்குகிறது.
அப்போது, அந்த சிறிய நீர்நிலையில் பதுங்கி இருந்த முதலை ஒன்று தலையை நீட்டியபடி வெளியே வருகிறது. இதனை கவனித்து விட்ட தாய் யானை, உடனே ஆவேசமுடன் அதனை நோக்கி சென்று சண்டையிடுகிறது. பின்னர் ஒரு வழியாக அதனை நீர்நிலையில் இருந்து வெளியேற்றி வெற்றி பெறுகிறது.
எனினும், அந்த நீருக்குள் வேறு ஏதேனும் பதுங்கி இருக்கின்றதா? என மீண்டும் சத்தம் போட்டபடியே அலசுகிறது. முதலையிடம் இருந்து தனது குட்டியை பாதுகாக்க தாய் யானை போராடிய அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து உள்ளனர். பார்வையிட்டும் வருகின்றனர்.