கள்ளக்காதல் தொடர பெற்ற மகனை கொன்ற தாய்
|சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என இரண்டாவது கணவர் அனிலிடம், கர்ரே கூறியுள்ளார்.
சங்காரெட்டி,
தெலுங்கானாவில் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இதில், அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (வயது 8) என தெரிய வந்தது. சிறுவனின் தந்தை ராஜு என்ற குமார் முன்பே உயிரிழந்து விட்டார். இதனால், தாயாரின் அரவணைப்பில் சிறுவன் வாழ்ந்து வந்திருக்கிறான்.
இந்நிலையில், சிறுவனின் மரணம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிறுவனை கொலை செய்தது, அவனுடைய தாயார் கர்ரே சுவாதி (வயது 30) என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதுபற்றிய விசாரணையில், சிறுவனின் தாயார் ராஜு உயிரிழந்ததும், தொந்து அனில் (வயது 31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுதவிர, வேறு சில ஆண்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
எனினும், இவருடைய கள்ளக்காதலுக்கு சிறுவன் இடையூறாக இருந்துள்ளான். இதனால், அவனை கொலை செய்ய தாயார் திட்டமிட்டு உள்ளார். கடந்த 10-ந்தேதி மாலை 5.30 மணியளவில் சிறுவனை தாயார் கர்ரே கொலை செய்துள்ளார்.
இதன்பின்னர், தன்னுடைய இரண்டாவது கணவர் தொந்து அனிலிடம், சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இருவரும் சிறுவனின் உடலை ஸ்கூட்டியில் எடுத்து சென்று முத்தங்கி கிராமம் அருகே சாலையில், இரவு 11.30 மணியளவில் வீசி விட்டு சென்றுள்ளனர். கடந்த 14-ந்தேதி இரவில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதன்பின், அவர்கள் இருவரும் மறுநாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கள்ளக்காதல் தொடர வேண்டும் என்பதற்காக, பெற்ற மகனை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.