மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது
|பெங்களூருவில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசில் அவர் சிக்கினார்.
பெங்களூரு:-
இளம்பெண் கற்பழிப்பு
பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி-குரூப் லே-அவுட்டில் குடிசை வீட்டில் ஒரு மனநலம் பாதித்த இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கு 19 வயதாகிறது. கடந்த 22-ந் தேதி அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்மநபர், மனநலம் பாதித்த இளம்பெண்ணை தாக்கியதுடன், அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதுபற்றி அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசில் இளம்பெண்ணின் தாய் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மர்மநபரை பிடிக்க தனிப்படை அமைத்தும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி உத்தரவிட்டு இருந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது
இதையடுத்து, மர்மநபரை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில், மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜபீ உல்லா என்ற இப்ராகிம் பாஷா (வயது 30) என்பதாகும். இவர், அந்த பெண் வசித்த வீட்டின் அருகேயே வசித்து வந்துள்ளார்.
இளம்பெண்ணின் தாய் வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தாக்கியதுடன், அவரை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 22-ந் தேதி காலை 11.30 மணியளவில் இளம்பெண்ணின் வீட்டில் இருந்து கைதான ஜபீ உல்லா வெளியே வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததால் போலீசாரிடம் சிக்கி இருந்தார். கைதான ஜபீ உல்லா மீது அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.