எதிர்ப்பை மீறி காதல் திருமணம்; மருமகனை சுட்டு கொன்ற மாமனார்
|துப்பாக்கிகளால் சுட்டு கொண்டதில் அங்கித் மற்றும் ரோகித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புலத் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிமோகன். இவருடைய மகளை அங்கித் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தெரியவர, காதலுக்கு ஹரிமோகன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இருவரும் ஒரே சமூகத்தினர் என்றபோதும், இவர்களின் காதலை ஹரிமோகன் கண்டித்துள்ளார். எதிர்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், ஹரிமோகனின் மகளை அங்கித் திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஹரிமோகன் நேற்று அங்கித்திடம் சென்று சண்டை போட்டுள்ளார்.
அப்போது, இருதரப்பினரும் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். துப்பாக்கிகளால் சுட்டு கொண்டதில் அங்கித் மற்றும் ரோகித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
ஹரிமோகன் மற்றும் ராகுல் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி நிருபர்களிடம் கூறிய போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் சிங், இந்த சம்பவத்தில் ராஜூ, மோனு மற்றும் கோவர்தன் ஆகிய 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.