காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டி பிடித்த நபரால் பரபரப்பு
|காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென நபர் ஒருவர் கட்டி பிடித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஹோசியார்பூர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார்.
இந்த யாத்திரையானது தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ந்தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது.
அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது. லூதியானாவில் கடந்த 14-ந்தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், நேற்று முன்தினம் ஜலந்தர் நகரில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கியது.
தொடர்ந்து இன்று பஞ்சாப்பின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்து உள்ளார். உடனடியாக அருகே இருந்த கட்சி தொண்டர்கள் அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.