திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது
|பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
திருட்டு
பெங்களூரு சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டுமான நிறுவன உரிமையாளர். அவர் தனது குடும்பத்துடன் அமர்நாத் யாத்திரைக்கு சென்று இருந்தார். இதுகுறித்து அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவரது வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். யாத்திரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய வெங்கடேஷ், வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ராமசாமி (வயது 45) என்பதும், அவர் பெங்களூரு சிக்கலசந்திரா பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
கைது
மேலும் அவர் கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூருவில் ஆளில்லா வீடுகளில் புகுந்து திருடிவந்ததும், அவர் மீது கிரிநகர், ராமமூர்த்திநகர், மடிவாளா உள்ளிட்ட ஏராளமான போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமசாமியை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ள போலீசாருக்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் பாராட்டு தெரிவித்தார்.