< Back
தேசிய செய்திகள்
உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நாளை புயலாக வலுப்பெறும்
தேசிய செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நாளை புயலாக வலுப்பெறும்

தினத்தந்தி
|
24 May 2024 9:27 AM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இந்த நிலையில், இது இன்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.

அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று 26-ந்தேதி நள்ளிரவில் வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காள கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காளதேசத்திற்கு அருகே சாகர் தீவுக்கும் கேப்புபராவுக்கும் இடையே புயலாக கரையை கடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இதற்கு 'ரெமல்' என பெயரிடப்பட இருக்கிறது. அரபிக் மொழியில் இதற்கு 'மணல்' என்று பொருள் ஆகும்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் கேரளாவை ஒட்டி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்