சத்ரபதி சிவாஜியின் நிர்வாகத்தில் இருந்து நிறைய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி உரை
|சத்ரபதி சிவாஜியின் நீர் மேலாண்மை மற்றும் கடற்படை இந்தியாவின் பெருமைகளாக இன்றளவும் உள்ளன என பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட்டு இந்தியர்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 102-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்தது. இதில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி உங்களை வந்தடைவது வழக்கம். ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்பே நடைபெறுகிறது.
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன். திட்டமிடப்பட்ட விசயங்கள் அனைத்தும் பரபரப்பாக இயங்கும். அதனால், மக்களின் ஆசிகள் எனக்கு அளிக்கும் ஆற்றலை விட வேறு எது சிறந்தவையாக இருக்கும் என நான் நினைத்தேன் என பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, நிர்வாகம் என்று வரும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜாவை நாம் கவனிக்க வேண்டும். அவரது வீரத்துடன், அவருடைய நிர்வாகத்தில் இருந்து நிறைய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்.
அவருடைய நிர்வாக திறன்கள், குறிப்பிடும்படியாக, சத்ரபதி சிவாஜியின் நீர் மேலாண்மை மற்றும் கடற்படை இன்றளவும் இந்தியாவின் பெருமைகளாக தொடர்ந்து நீடிக்கின்றன என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.