< Back
தேசிய செய்திகள்
பெரிய எண்ணிக்கையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம்; விரைவில் தேதி அறிவிப்பு: காங்கிரஸ் பொது செயலாளர்
தேசிய செய்திகள்

பெரிய எண்ணிக்கையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம்; விரைவில் தேதி அறிவிப்பு: காங்கிரஸ் பொது செயலாளர்

தினத்தந்தி
|
22 May 2023 7:01 PM IST

பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்திற்கான தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் பொது செயலாளர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இன்று மாலை நேரில் சந்தித்து பேசினார். கார்கேவுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனையில் பங்கேற்றார்.

அவர்கள் இருவரின் சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டம் விரைவில் நடைபெறும்.

ஓரிரு நாட்களில் கூட்டத்திற்கான நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில் பெரிய எண்ணிக்கையிலான எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன என அவர் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்.

இதற்காக, டெல்லியில் கடந்த சில மாதங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை அவர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை நாட்டின் நலனுக்காகவே செய்கிறேன் என்றும் எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதன்பின்னர், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதுபற்றி குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்துவோம். நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்