"வரலாற்றுச் சட்டம்.." - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி
|மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க மசோதா வழிவகை செய்யும்.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று அதனை மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "அரசியலமைப்பு (நூற்றி இருபத்தெட்டாவது திருத்தம்) மசோதா, 2023-ஐ இவ்வளவு சிறப்பான ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும், இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மேலும் அதிகரிக்கும் மற்றும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் இன்னும் அதிக அளவில் பங்கேற்பதற்கு உதவும்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.