< Back
தேசிய செய்திகள்
பணி ஓய்வு பரிசாக ஹெலிகாப்டரில் பயணம்; தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன்
தேசிய செய்திகள்

பணி ஓய்வு பரிசாக ஹெலிகாப்டரில் பயணம்; தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன்

தினத்தந்தி
|
31 July 2022 3:46 AM GMT

ராஜஸ்தானில் ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தாயாரை பள்ளியில் இருந்து வீட்டுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அவரது மகன் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.


அஜ்மீர்,

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் பிசாங்கன் நகரில் கேசர்புரா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியை பணியில் இருந்தவர் சுசிலா சவுகான். இவரது மகன் யோகேஷ் சவுகான்.

அமெரிக்காவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். யோகேஷுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆசிரியை பணியில் 33 ஆண்டுகள் பணியாற்றி சுசிலா நேற்று ஓய்வு பெற்றுள்ளார். பணியிறுதி நாளில் பள்ளியில் இருந்து கிளம்ப தயாராக இருந்த அவருக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.

அவரது மகன் யோகேஷ் ஹெலிகாப்டர் ஒன்றை தயாராக நிறுத்தி வைத்துள்ளார். இதன்பின்னர், கேசர்புராவில் இருந்து அஜ்மீர் வரை சுசிலா ஹெலிகாப்டரில் பயணித்து வீடு வந்து சேர்ந்துள்ளார். இதனை காண அந்த கிராமத்தினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.




இதுபற்றி யோகேஷ் கூறும்போது, எனது தாயாரின் ஓய்வு நாளில் ஒரு தனித்துவமிக்க பரிசு அளிக்க விரும்பினேன். அதனால், ஹெலிகாப்டரில் அவரை அழைத்து வருவது என முடிவு செய்தேன். இந்த பகுதியில் மக்கள் இந்தளவுக்கு கூடுவார்கள் என தெரியாது.

எனினும் அதிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் என கூறியுள்ளார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் யோகேஷ் சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என சுசிலா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்