துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிகாலம் நிறைவு 'நல்ல மனிதர் வெளியேறுகிறார்' - காங்கிரஸ்
|துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் நல்ல மனிதர் வெளியேறுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் வரும் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் 6-ம் தேதியே நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பாஜக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் போட்டியிட உள்ளார். எதிர்க்கட்சிகள் இதுவரை துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவியை வெங்கையா நாயுடு விரைவில் நிறைவு செய்ய உள்ள நிலையில் இது குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வெங்கையா நாயுடுவின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் தவறவிடப்படும்.
பல சமயங்களில் அவர் எதிர்கட்சியினர் அனைவரையும் கிளர்ந்தெழச்செய்தார். ஆனால் இறுதியில் ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம் ஆனால், அவர் சோர்வடையமாட்டார் என எனக்கு தெரியும்' என தெரிவித்துள்ளார்.