தேன் எடுக்க சென்ற இடத்தில் கிடைத்த தங்க நாணயம் புதையல்: பங்கு கிடைக்காதவர் போலீசில் போட்டுக் கொடுத்ததால் மாட்டிக்கொண்ட ஆசாமிகள்...!
|வருண் நடந்ததை அவரது சகோதரியிடம் கூறி செல்போனில் எடுத்த புகைப்படத்தை காண்பித்துள்ளார்.
திருமலை,
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண். இவர்கள் கடந்த மே 7ம் தேதி கிராமத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை குன்றின் மீது பழமையான அங்கம்மா கோயில் அருகே தேன் எடுக்க சென்றனர். இதை அறிந்த அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியம், வெங்கடேஷ்வரன் ஆகியோரும் அங்கு சென்றனர்.
அப்போது ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு கிடைத்தது.அதை உடைத்தபோது, அதில் மண் கலந்த தங்ககாசுகள் இருப்பதை பார்த்தனர். இந்நிலையில் உறவு முறையில் சகோதரர்களான அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோர் தங்க நாணயங்களை எடுத்து கொண்டு காலி சொம்பை ஏரியில் வீசி உள்ளனர். மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என வருணையும், சுப்ரமணியத்தையும் மிரட்டி உள்ளனர்.
இதற்கிடையில் வருண் அந்த தங்க காசுகளை சகோதரர்களுக்கு தெரியாமல் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். இதையடுத்து சகோதரர்கள் அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோர் வருண், சுப்ரமணியத்திற்கு தெரியாமல் தங்க நாணயங்களை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து பல லட்சம் பெற்றுள்ளனர். அதில் சுமார் 770 கிராம் தங்கத்தை உருக்கி நகைகள் செய்து கொண்டும், தங்கத்தை விற்பனை செய்த ரூ.4 லட்சம் பணத்தில் பழைய சொகுசு கார் மற்றும் ஆட்டோ வாங்கி உள்ளனர். மேலும், தனது சகோதரி மகளிர் குழு மூலம் வாங்கிய ரூ.1 லட்சம் கடனை அடைத்தனர். தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், வருண் நடந்ததை அவரது சகோதரியிடம் கூறி செல்போனில் எடுத்த புகைப்படத்தை காண்பித்துள்ளார். பின்னர், நெல்லூர் மாவட்ட எஸ்பி, கலெக்டரிடம் நடந்ததை கூறி புகைப்படத்தையும் காண்பித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, புதையலாக கிடைத்த பொருட்களை மீட்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்தனர். நெல்லூர் ஊரக போலீசார் அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பணம், 21 சவரன் தங்கம், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள், 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசு கார், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.