< Back
தேசிய செய்திகள்
தம்பதியை வழிமறித்து ரூ.3 லட்சம் தங்கசங்கிலி பறிப்பு
தேசிய செய்திகள்

தம்பதியை வழிமறித்து ரூ.3 லட்சம் தங்கசங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
3 July 2023 2:51 AM IST

சிந்தாமணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர்.

கோலார் தங்கவயல்,

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சென்னசெட்டிஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் புஷ்பலதா. இவரது கணவர் சோமேஷ். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் சிந்தாமணிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மைலாபுரா-கைலாபுராவை அடுத்த கவி சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், தம்பதியை வழிமறித்தனர்.

இதை பார்த்த தம்பதி அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் அவர்களை தப்பிசெல்ல விடாமல் கத்தி முனையில் மடக்கினர். பின்னர் தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள், புஷ்பலதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

இந்தநிலையில் கண்எரிச்சல் தாங்க முடியாமல் தவித்த தம்பதி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தம்பதி தரப்பில் சிந்தாமணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஹெல்மெட் அணிந்து வந்த, 2 பேர் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றிருப்பதாக தெரிவித்தனர். 2 பேருக்கும் சுமார் 40 வயது முதல் 50 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிந்தாமணி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்