< Back
தேசிய செய்திகள்
தற்போதைய சூழலில் பொது முடக்கம் தேவை இல்லை - பிரபல மருத்துவ நிபுணர்கள்
தேசிய செய்திகள்

தற்போதைய சூழலில் பொது முடக்கம் தேவை இல்லை - பிரபல மருத்துவ நிபுணர்கள்

தினத்தந்தி
|
24 Dec 2022 11:48 PM IST

தற்போதைய சூழலில் பொது முடக்கத்துக்கு தேவை இல்லை, சர்வதேச விமானங்களுக்கு தடையும் வேண்டாம் என்ற பிரபல மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய அலை

கொரோனாவின் புதிய அலை சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் வீசி வருகிறது. பி.எப்.7 என்னும் உருமாறிய கொரோனா அங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன.

பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், பொதுமுடக்கம் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழத்தொடங்கி உள்ளது.

பொதுமுடக்கத்துக்கு தேவை இல்லை

இதையொட்டி பிரபல மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

டாக்டர் ரன்தீப் குலேரியா (எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்):-

ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரிக்கவில்லை. இந்தியா தற்போது நல்ல நிலையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச விமானங்களை கட்டுப்படுத்தத் தேவை இல்லை. பொதுமுடக்கம் போட வேண்டியதும் இல்லை.

கடந்த கால அனுபவம், விமானங்களைத் தடை செய்வது கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதில் நல்ல பலன் அளிக்கவில்லை என்றே காட்டுகிறது. மேலும் சீனாவில் தற்போது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் பி.எப்.7 வைரஸ், நமது நாட்டில் ஏற்கனவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

நமது நாட்டில் ஏற்கனவே மிக நல்ல முறையில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன, இயல்பான தொற்றுபாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கலப்பு நோய் எதிர்ப்புச்சக்தி நமது மக்களுக்கு கிடைத்துள்ளது. எனவே மீண்டும் கடுமையான அளவுக்கு கொரோனா வெடிப்பு ஏற்படவோ, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கையோ நிகழ வாய்ப்பு இல்லை.

எனவே இந்த நிலைமையை கருத்தில் கொள்கிறபோது, மக்களுக்கு நல்ல கலப்பு நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்கத்தக்கு தேவை இல்லை.

கலப்பு நோய் எதிர்ப்புச்சக்தி

டாக்டர் நீரஜ் குப்தா (டெல்லி சர்தர்ஜிங் ஆஸ்பத்திரி நுரையீரல் துறை பேராசிரியர்):-

சீனா மற்றும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நமது நாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கிறபோது எதிர்காலத்தில் பொதுமுடக்கம் போடுவது போன்ற நிலைமை இல்லை.

கொரோனா கால நடத்தை வலுப்படுத்தப்பட வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய நிலைமையை பார்க்கிறபோது, தொற்று இன்னும் முடிந்து விடவில்லை என்றே காட்டுகிறது. எனவே நாம் மெத்தமான இருந்து விட முடியாது.

கலப்பு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைத்திருப்பதால் அது ஒருவரை எதிர்கால தொற்றுகளுக்கு எதிராக மிகவும் பாதுகாப்பாக ஆக்குகிறது.

பொதுமக்கள் முன்தடுப்பு, ஆரம்பகால நோய் அறிதல் மற்றும் நல்ல தடுப்பூசி உத்தி போன்ற தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இந்தியாவுக்கு நன்மை உள்ளது,

சீனாவை பொறுத்தவரை அங்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. தடுப்பூசி உத்தியும் சரியாக இல்லை. முதியோரை, பாதிக்கப்படக்கூடிய நபர்களை விட இளையவர்களுக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக அந்த நாட்டு மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகவும், அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கிறது.

250-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள்...

டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா (தொற்றுநோய் இயல் நிபுணர்):-

கடந்த 3 ஆண்டுகால அனுபவம், பயணக் கட்டுப்பாடுகள் வைரஸ் பரவுவதை தாமதப்படுத்தினாலும், அதற்கு எந்த பங்கும் இல்லை என்பதை காட்டுகிறது.

உள்ளபடியே கூறுவதானால், அது தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதில்லை. மேலும், புதிய வைரஸ் கண்டறியப்படுகிறபோது, அது ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி விடுகிறது.

ஒமைக்ரான் வைரசை ஓராண்டுக்கு முன்பாகவே பார்த்து விட்டோம். பயண கட்டுப்பாடுகள் இனி பங்களிப்பு செய்யாது. இந்தியாவில் ஏற்கனவே 250-க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் துணை வைரஸ்கள் உள்ளன. எனவே பகுத்தறிவு அணுகுமுறை 'ரேண்டம்' மாதிரி பரிசோதனைகள் ஆகும். நாட்டினுள் வருகிற சர்வதேச பயணிகளுக்கு எந்த கட்டாய கட்டுப்பாடும் இன்றி, குறைந்தபட்ச சிரமங்களுடன்தான் வளர்ந்து வரும் கோவிட் துணை வகைகளைக் கண்காணிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

பூஸ்டர் டோஸ் போட்டு விடுங்கள்...

டாக்டர் என்.கே. அரோரா (தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர்):-

தற்போது நமது நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. பதற்றம் அடைவதற்கு காரணமே இல்லை. ஆனால் மக்கள் கொரோனா கால நடத்தைகளை பின்பற்ற வேண்டும், தகுதி வாய்ந்தவர்கள் கண்டிப்பாக கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 97 சதவீத மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியும், 90 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும், 27 சதவீதத்தினர் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளையும் (பூஸ்டர் டோஸ்) போட்டுக்கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்