கரும்பு தோட்டத்தில் மருத்துவ மாணவரை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்த கும்பல்
|மராட்டியத்தில் மருத்துவ மாணவரை கரும்பு தோட்டத்துக்கு கடத்தி சென்று அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, கும்பல் ஒன்று பணம் பறித்து உள்ளது.
புனே,
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் பாராமதி நகரில் விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் மருத்துவம் படித்து வருகிறார். அவர், விடுதியில் இருந்து மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்து உள்ளார்.
அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர் ஒருவர், மாணவரை துன்புறுத்தி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் தொகையை பறித்து கொண்டார். இதனை தடுக்க முயன்ற மாணவரை அந்த நபர் அடித்துள்ளார்.
இதனை கவனித்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதன்பின்பு, 3 பேரும் சேர்ந்து அந்த மாணவரை கரும்பு தோட்டத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர்.
ஒரே கும்பலை சேர்ந்த இவர்கள் மருத்துவ மாணவரை, கரும்பு ஒன்றால் அடித்தும், உடைகளை களைய செய்து நிர்வாணப்படுத்தியும் உள்ளனர். அந்த நிலையிலேயே அவரை புகைப்படங்களாக எடுத்து உள்ளனர்.
இன்னும் பணம் தரவேண்டும் என்றும் இல்லையென்றால், புகைப்படங்களை வைரலாக்கி விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன மாணவர் அதற்கு ஒப்பு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஏ.டி.எம். ஒன்றுக்கு மாணவரை அழைத்து சென்றுள்ளனர். ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.14 ஆயிரம் எடுத்து அவர்களிடம் மாணவர் கொடுத்துள்ளார். இதனை வாங்கி கொண்ட கும்பல் தப்பி சென்று விட்டது.
எனினும், கும்பலில் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை மருத்துவ மாணவர் கவனித்து உள்ளார். போலீசாரை அணுகி நடந்த சம்பவம் பற்றி புகாராக அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து தொடர்புடைய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.