ஒருதலைக்காதல்: இளம்பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திய பழ வியாபாரி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
|இளம்பெண் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது பாலமுருகன் கடைக்கு சென்று பழம் வாங்கி செல்வது வழக்கம்.
லாஸ்பேட்டை,
ஒருதலைக் காதலால் இளம்பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட பழ வியாபாரி, தாய், தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
புதுவை முத்தியால்பேட்டை வாழைகுளம் அக்காமடசாமி வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). இவர் லாஸ்பேட்டை தனியார் ஆஸ்பத்திரி அருகே பழக்கடை வைத்துள்ளார். கருவடிக்குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். அந்த இளம்பெண் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது பாலமுருகன் கடைக்கு சென்று பழம் வாங்கி செல்வாராம். அப்போது பாலமுருகன் அந்த இளம்பெண்ணிடம் அன்பாக பேசி ஒருதலையாக காதலித்துள்ளார்.
ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பாலமுருகன் அந்த பெண்ணின் பெயரை தனது நெஞ்சில் பச்சை குத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை அறிந்து இளம்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலமுருகன் மிரட்டியுள்ளார். நேற்று முன்தினம் அந்த இளம்பெண் கருவடிக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பாலமுருகன், அவரது தாயார் சித்ரா, தங்கை பரமேஸ்வரி ஆகியோர் சென்று, திருமணம் செய்து கொள்ள மறுத்தால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், அவரது தாயார் சித்ரா, தங்கை பரமேஸ்வரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.