சிறையில் சில மாதங்கள் இருந்தாலும் கவலை இல்லை: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் சிசோடியா பேட்டி
|சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா புறப்படும் முன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபான ஊழல் வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார்.
இதனால், மணிஷ் சிசோடியா சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து சி.பி.ஐ. தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிஷ் சிசோடியா இன்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார். திறந்த நிலையிலான காரில் நின்றபடி சென்ற அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதுபற்றி சிசோடியா தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், சி.பி.ஐ.யிடம் இன்று மீண்டும் செல்கிறேன். விசாரணை முழுவதும் நான் முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்பேன்.
லட்சக்கணக்கான குழந்தைகளின் அன்பு மற்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு உள்ளன. சில மாதங்கள் வரை தன்னை சிறையில் வைத்தாலும் அதற்காக கவலைப்பட போவதில்லை என தெரிவித்து உள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்கு செல்வது என்பது எனக்கு ஒரு சிறிய விசயம். நாட்டுக்காக தனது வாழ்வையே இழந்த பகத் சிங்கின் வழியில் வந்தவன் நான் என அவர் கூறியுள்ளார். இதன்பின்னர் டெல்லி ராஜ்காட்டில் அமர்ந்தபடி சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.