< Back
தேசிய செய்திகள்
சொந்த மகனை கொலை செய்ய கூலிப்படையை வாடகைக்கு அமர்த்திய தந்தை; திடுக் தகவல்
தேசிய செய்திகள்

சொந்த மகனை கொலை செய்ய கூலிப்படையை வாடகைக்கு அமர்த்திய தந்தை; திடுக் தகவல்

தினத்தந்தி
|
8 Dec 2022 9:41 AM GMT

கர்நாடகாவில் சொந்த மகனை கொலை செய்ய தந்தை கூலிப்படையை வாடகைக்கு அமர்த்திய திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.


ஹப்பள்ளி,


கர்நாடகாவில் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (வயது 26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுபற்றி அவரது உறவினர் ஹப்பள்ளி போலீசில் கடந்த 3-ந்தேதி புகார் அளித்து உள்ளார்.

எனினும், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சந்தேகத்தின் பேரில் அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த வழக்கில் அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஹப்பள்ளி காவல் ஆணையாளர் லபு ராம் கூறும்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை நடந்துள்ளது என கூறியுள்ளார்.

வேறு விவரங்களை அவர் வெளியிடவில்லை. எனினும், குடிபோதைக்கு அகில் அடிமையாகி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அகிலின் தந்தை 6 பேர் கொண்ட கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உள்ளார்.

இதன்பின்பு, தனது மகனை அழைத்து கொண்டு அவர்களிடம் விட்டு விட்டு, தனியாக திரும்பியுள்ளார். இதன்பின்னர், அகிலை படுகொலை செய்த கூலிப்படை, அன்றைய தினம் காலகத்கி பகுதியருகே தேவிகொப்பா என்ற இடத்தில் கரும்பு தோட்டத்திற்குள் அவரது உடலை புதைத்து விட்டு தப்பி விட்டது என லபு ராம் இன்று கூறியுள்ளார.

இதனை அடுத்து, பரத் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் உடனடியாக 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மகாதேவ் நல்வாட், சலீம் சலாவுதீன் மவுல்வி, ரகுமான் விஜாப்பூர், பிரபைய்யா ஹயர்மேத் மற்றும் முகமது ஹனீப் என குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஹுப்ளியை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்பதும் மறுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்