< Back
தேசிய செய்திகள்
டிராகன் பழம் சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கும் விவசாயி
தேசிய செய்திகள்

'டிராகன்' பழம் சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கும் விவசாயி

தினத்தந்தி
|
30 Aug 2023 6:45 PM GMT

‘யு-டியூப்’பில் பார்த்து பயிர் செய்து ‘டிராகன்’ பழம் சாகுபடி செய்து விவசாயி லாபம் சம்பாதித்து வருகிறார்.

கோலார் தங்கவயல்

வறண்ட பூமி

கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே அமைந்துள்ளது கோலார் மாவட்டம். வறண்ட பூமியான இங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டும் வருகிறார்கள்.

கோலார் மாவட்டத்தில் தக்காளி சாகுபடியே பிரதானமாக உள்ளது. தக்காளி விளைச்சல் கை கொடுக்காவிட்டால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் ஆறுகள், கால்வாய்கள் எதுவும் கிடையாது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மழையை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது மாலூரில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாலூரை சேர்ந்த விவசாயி ஒருவர், மற்ற விவசாயிகளை விட வித்தியாசமாக சிந்தித்து 'டிராகன்' பழத்தை சாகுபடி செய்து லாபம் சம்பாதித்து வருகிறார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

'டிராகன்' பழம்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா அசண்டஹள்ளி அருகே குப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி, உருளை கிழங்கு, குடை மிளகாய், கேரட் ஆகியவற்றை பயிரிட்டு வந்தார்.

அவர், வங்கியிலும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி பயிர் செய்து வந்தார்.

ஆனால் அந்த பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காததால் அவர் நஷ்டமடைந்தார். மேலும் கடனிலும் சிக்கி தவித்தார். இதனால் லாபகரமான பயிர் செய்ய நினைத்த விவசாயி சீனிவாஸ், இதுபற்றி 'யு-டியூப்'ப்பில் தேடினார்.

அதாவது, 'யு-டியூப்'பில் லாபகரமான பயிர் எது என்பது குறித்து தேடினார். இந்த தேடலில் அவருக்கு கிடைத்த பதில் தான் 'டிராகன்' பழம். இதனால் தனது நிலத்தில் டிராகன் பழத்தை சாகுபடி செய்ய சீனிவாஸ் முடிவு செய்தார்.

லாபம்

அதன்படி, தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை உழுது கல் தூண்கள் நட்டு, இரும்பு கம்பியை பலகை போன்று தயார் செய்து வைத்தார். பின்னர் பெங்களூரு எலகங்கா மற்றும் தமிழ்நாடு ஓசூர் பகுதிகளில் உள்ள நர்சரிகளுக்கு சென்று 2,000 டிராகன் பழ கன்றுகளை வாங்கி வந்து தனது நிலத்தில் சீனிவாஸ் நட்டு வைத்தார்.

ஒரு ஏக்கரில் டிராகன் பழ கன்றுகளை நட அவருக்கு ரூ.7½ லட்சம் வரை செலவானது. சொட்டு நீர் பாசன முறையில் டிராகன் பழத்தை வளர்த்து வந்தார்.

கடந்த ஓராண்டாக வளர்த்து வந்த பயிா் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. டிராகன் பழத்துக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விவசாயி சீனிவாசுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதன்காரணமாக அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

'யு-டியூப்' மூலம் பார்த்து...

இதுகுறித்து சீனிவாஸ் கூறுகையில், 'நான் எனது நிலத்தில் தக்காளி, உருளைகிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்து சரியான விலை கிடைக்காமல் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். இதனால் என்ன செய்வது என்று யோசித்த போது தான், 'யு-டியூப்' தேடலில் எனக்கு டிராகன் பழம் பற்றி தெரியவந்தது.

டிராகன் பழம் பற்றியும், அதன் விளைச்சல் பற்றியும், அதனை பாதுகாப்பாக வளர்ப்பது பற்றியும் 'யு-டியூப்' மூலம் அறிந்து கொண்டேன். வறண்ட கால நிலையிலும் நல்ல மகசூலை டிராகன் பழம் தரும் என்பதையும் தெரிந்து கெண்டேன்.

இதனால், டிராகன் பழங்களை நட்டு வளர்த்து வந்தேன். மார்க்கெட்டில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. டிராகன் பழம் சாகுபடி செய்ய எனக்கு ரூ.7½ லட்சம் செலவானது. முதல்கட்டமாக 100 டிராகன் பழங்கள் அறுவடை செய்து மாலூர் மார்க்ெகட்டில் விற்பனைக்கு கொண்டு சென்றேன். ஒரு பழத்துக்கு ரூ.33 கிடைத்தது.

இதனால் எனக்கு ரூ.3,300 கிடைத்தது. ஆனால் பெங்களூரு மார்க்கெட்டில் டிராகன் பழத்துக்கான தேவை அதிகமாக இருப்பதை அறிந்தேன். இதனால் பெங்களூரு மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று டிராகன் பழத்தை விற்பனை செய்ய உள்ளேன்.

குறைந்த செலவில் நல்ல லாபம் தரும் டிராகன் பழத்தை விவசாயிகள் பயிரிட முயற்சிக்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்