சீக்கிய குருத்வாரா அருகே மதுபானம் குடித்த பெண் அதிரடியாக சுட்டு கொலை
|பஞ்சாப்பில் சீக்கிய குருத்வாராவில் புனித நீர் தொட்டி அருகே மதுபானம் குடித்த பெண் அதிரடியாக சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பாட்டியாலா,
பஞ்சாப்பில் சீக்கியர்கள் வழிபடும் புனித ஸ்தலங்களாக குருத்வாராக்கள் உள்ளன. இந்த நிலையில், பாட்டியாலா நகரில் துக்னிவான் சாகிப் குருத்வாரா அருகே பரமீந்தர் கவுர் (வயது 33) என்ற பெண் சென்றுள்ளார்.
குருத்வாராவின் சரோவர் எனப்படும் புனித நீர் அடங்கிய தொட்டியருகே சென்ற அவரிடம் மதுபானம் இருந்து உள்ளது. அவர் மதுபானம் குடித்து உள்ளார் என கூறப்படுகிறது. இதனை குருத்வாராவின் உறுப்பினர்கள் கவனித்து உள்ளனர்.
இதனால், அந்த பெண்ணை மேலாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்வது என முடிவு செய்தனர். ஆனால், குருத்வாராவுக்கு அடிக்கடி வரும் நிர்மல்ஜித் சிங் சைனி என்பவர் இதனை அறிந்ததும் ஆத்திரமடைந்து உள்ளார்.
அவர் உடனடியாக, தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து 5 முறை பெண்ணை நோக்கி சுட்டு உள்ளார். இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் சுருண்டு விழுந்து உள்ளார்.
அவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி விட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை சீராக உள்ளது என கூறப்படுகிறது. போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.