வாசலில் விளையாடிய 2 வயது மகனை கவ்வி சென்ற கழுதைப்புலி; 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்
|சத்தீஷ்காரில் வாசலில் விளையாடிய 2 வயது மகனை கவ்வி சென்ற கழுதைப்புலியை 3 கி.மீ. தாய் துரத்தி சென்று உள்ளார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் பஸ்தார் மாவட்டத்தில் சித்ரகூடம் வன பகுதியை ஒட்டிய பகுதியில் நைனார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்து உள்ளனர். அவர்களது வீட்டு வாசலின் முன்புறத்தில் 2 வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்து உள்ளான்.
இந்நிலையில், வன பகுதிக்குள் இருந்து இதனை கவனித்த கழுதைப்புலி ஒன்று அந்த சிறுவனை தாக்கி வாயில் கவ்வியபடி இழுத்து சென்று உள்ளது. இதனை பார்த்த சிறுவனின் தாய், அதனை துரத்தி கொண்டு சென்று உள்ளார்.
ஏறக்குறைய 3 கி.மீ. தொலைவுக்கு காட்டுக்குள் விடாமல் பின் தொடர்ந்து சென்ற அந்த தாய், தனது மகனை கழுதைப்புலியிடம் இருந்து மீட்டு உள்ளார். இதன்பின்னர், அருகே இருந்தவர்கள் உதவியுடன் சிறுவனை திம்ராபால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். ஒரு மணி நேரம் டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சிறுவன் மரணம் அடைந்து விட்டான் என டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்து உள்ளனர்.