< Back
தேசிய செய்திகள்
திருமண வரனுக்கான பூஜையில் குளறுபடி; புரோகிதரின் காதுகளை கடித்து வைத்த நபர்
தேசிய செய்திகள்

திருமண வரனுக்கான பூஜையில் குளறுபடி; புரோகிதரின் காதுகளை கடித்து வைத்த நபர்

தினத்தந்தி
|
3 Oct 2022 6:36 PM IST

மத்திய பிரதேசத்தில் திருமண வரன் அமைவதற்கான பூஜையை தவறாக செய்து விட்டார் என கூறி புரோகிதரின் காதுகளை கடித்து, தாக்கிய வழக்கில் தந்தை, இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.



போபால்,


மத்திய பிரதேசத்தில் திருமண வரன் அமைவதற்கான பூஜையை தவறாக செய்து விட்டார் என கூறி புரோகிதரின் காதுகளை கடித்து, தாக்கிய வழக்கில் தந்தை, இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வருபவர் லட்சுமிகாந்த் சர்மா. இவருக்கு விபுல் மற்றும் அருண் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா நகரை சேர்ந்த குஞ்ச்பிஹாரி சர்மா (வயது 60) என்ற புரோகிதரை லட்சுமிகாந்த் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

தனது மகனுக்கு திருமண வரன் சரியாக அமையவில்லை. அதனால், நல்ல திருமண வரன் அமைவதற்கான பூஜையை நடத்தி தரும்படி கேட்டுள்ளார். இதன்படி புரோகிதரும் சடங்குகள், சத்யநாராயண பூஜைகளை செய்து தந்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பூஜைக்கு பின்னர், தவறான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன என கூறி ஆத்திரத்தில், புரோகிதரின் காதுகளை விபுல் கடித்து வைத்து உள்ளார். பூஜை நடந்த பின்னர், அருண் விசித்திரமுடன் நடந்துள்ளார் என்று கூறி, லட்சுமிகாந்த் மற்றும் அவரது மகன்கள் இருவரும் புரோகிதரை தாக்கியுள்ளனர்.

இதில், புரோகிதருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. காதுகளில் ரத்தம் வழிய புரோகிதரை, பக்கத்தில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்பு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தந்தை, மகன்கள் என 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்