நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து நமக்கு உத்வேகம் அளிப்பவர்களை நினைவுகூரும் தினம்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
|அரசியல் சாசனம் வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்களை நினைவுகூரும் தினம் என்று தேசிய கொடி ஏற்றி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தி வருகின்றனர்.
இதேபோன்று, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய தினம், அன்னை பாரதத்திற்காக உயிர்த்தியாகம் செய்து நாட்டுநலனுக்கு பங்காற்றி, இன்றளவும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பவர்களை நினைவுகூரும் தினம்.
அதனுடன், மிக பெரிய ஜனநாயகம் கொண்ட நாட்டின் அரசியல் சாசன வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்களை நினைவுகூரும் தினமும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.