< Back
தேசிய செய்திகள்
கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலம்;  பெண் உள்பட 4 பேர் கைது; பரபரப்பு தகவல்
தேசிய செய்திகள்

கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலம்; பெண் உள்பட 4 பேர் கைது; பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
15 July 2022 8:54 PM IST

எரிந்த காரில் மனித எலும்புக்கூடு கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக கட்டிட தொழிலாளியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;

எரிந்த காரில்...

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஹெனுபேரு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிந்த காரில் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்தது.

இந்த சம்பவம் குறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் எரிந்த காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணையை தொடங்கினர்.

4 பேர் கைது

இந்த நிலையில் இதுதொடர்புடைய பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கார்கலா தாலுகா மாலா பகுதியை சேர்ந்த சதானந்த செரிகர், ஷில்பா (வயது 34), சதீஷ் (40) மற்றும் நித்தின் (40) ஆகியோர் என்பதும், காரில் எரிந்த நிலையில் இருந்தது கார்கலாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஆனந்த தேவடிகா (35) என்பதும் தெரியவந்தது.


திடுக்கிடும் தகவல்கள்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சதானந்த செரிகர், தான் செய்த பணமோசடியை மறைப்பதற்காக தனது கார் விபத்தில் சிக்கி தானும் இறந்துவிட்டதாக நாடகமாட முடிவு செய்தார்.

அதற்காக கார்கலா பகுதியை சேர்ந்த தனது தோழியான ஷில்பாவுடன் சேர்ந்து அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் ஆனந்த தேவடிகாவுக்கு மதுபானத்தில், தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து அவரை குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் அவரை தனது காரில் அழைத்து சென்று ஹெனுபேரு அருகே உயிருடன் எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சதீஷ் மற்றும் நித்தின் உதவி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், எரிந்த காரின் பதிவெண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அது சதானந்த செரிகர் என்பவருடையது என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் அந்த கொலையை செய்வதற்கு முன்பு சாஸ்தான் சுங்கச்சாவடி வழியாக சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் கார்கலாவுக்கு பஸ்சில் சென்றபோது அவர்களை மடக்கி பிடித்து கைது செய்ததாக தெரிவித்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்