40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுடன் பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய காங்கிரசார்
|40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுடன் பெங்களூரு நகர் முழுவதும் ‘கியூ.ஆர்’ கோடுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புகைப்படத்துடன் ‘பே-சி.எம்.’ என போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், அரசு ஒப்பந்த பணிகளுக்கு மந்திரிகள் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதுதொடா்பாக ஏற்கனவே பிரதமர் மோடிக்கும், ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் கடிதமும் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அதேநேரத்தில் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் எழுப்பி வருகிறார்கள். இந்த 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்த போவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
'பே-சி.எம்.' போஸ்டர்
இந்த நிலையில் பெங்களூரு நகரில். 40 சதவீத கமிஷன் பெறுவதாக கூறி, பா.ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நூதன முறையில் பிரசாரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போஸ்டர்களில் 'கியூ.ஆர்' கோடில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் படத்துடன் 'பே-சி.எம்.' என போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல்-மந்திரியின் புகைப்படத்துடன் 'பே-சி.எம்.' போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதாவது செல்போன் செயலி மூலமாக பணம் செலுத்துவதற்கு 'கியூ.ஆர்' கோடை ஸ்கேன் செய்வது போல, காங்கிரசார் ஒட்டி இருக்கும் போஸ்டர்களில் உள்ள 'கியூ.ஆர்' கோடை ஸ்கேன் செய்தால், அதில் பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள், 40 சதவீத கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட தகவல்கள், சம்பந்தப்பட்ட செல்போனுக்கு கிடைக்கும் வகையில் செய்யப்பட்டு இருந்தது.
போலீஸ் நிலையங்களில் வழக்கு
கர்நாடக பா.ஜனதா அரசு, ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், இதுபோன்ற நூதன போஸ்டர்களை ஒட்டி காங்கிரசார் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெங்களூருவில் முதல்-மந்திரி புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனடியாக கிழித்து அகற்றும்படி மாநகராட்சி தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டது.
அதே நேரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய 'கியூ.ஆர்' கோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், அந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகிரவுண்டு, சதாசிவநகர், சேஷாத்திரிபுரம், பாரதிநகர் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தார்கள். அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், "கர்நாடகத்தில் எனது புகழுக்கும், கர்நாடகத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த சதி செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இத்தகைய அவதூறான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த அவதூறு பிரசாரத்தை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு தெரியும்
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப எங்களுக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு எதிரான பிரசாரம் பெரிய பொய் என்பது பொதுமக்களுக்கு தெரியும். இந்த அவதூறு பிரசாரத்திற்கு மதிப்பு கிடையாது. கர்நாடகத்தின் புகழை கெடுக்கும் மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சிக்கும் முடிவுக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.