மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் - பட்னாவிஸ் தகவல்
|பல்வேறு துறைகளில் ஆய்வு முடிவுகளை எடுப்பதற்காக மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:
நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தேசிய வளர்ச்சி கொள்கையை பரிந்துரை செய்கிறது. மேலும் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநில பிரதிநிதிகள் நேற்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியதாவது,
"சந்திப்பின் போது நிதி ஆயோக்கின் அடுத்த பரிமாணமாக அதே போன்ற அமைப்பை மராட்டியத்தில் தொடங்க ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் எடுக்கப்படும் முடிவுகளை ஆய்வு செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த நிறுவனம் மாற்றத்திற்கான மராட்டிய நிறுவனம் (மித்ரா) என்று பெயரிடப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும். இந்த புதிய தொடக்கத்திற்காகவும், நிதி ஆயோக் குழுவுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இதுபோன்ற விவகாரங்களில் நிதி ஆயோக் தீவிரமான ஆய்வை மேற்கொண்டு உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக சிறந்த முடிவுகளை எடுக்கமுடியும். எனவே மாநிலத்திலும் தரவுகளை விரிவாக ஆய்வு செய்ய நிதி ஆயோக் போன்ற அமைப்பு தொடங்கப்படும்." என்றார்.
உதாரணமாக, ஒரு துறையிடம் நோய் பரவல் பற்றிய விவரங்கள் உள்ளன, மற்றொரு துறையிடம் அசுத்தமான நீரின் இருப்பிடம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு துறைகளும் தங்கள் தரவைப் பகிர்ந்து கொண்டால், முடிவெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.
மேலும் அதிகாரிகளுடன் சொத்துக்களில் இருந்து பணம் சம்பாதித்தல், வேளாண்மையில் உள்ள தொழில்நுட்பம், போக்குவரத்து துறையில் மாற்று எரிபொருளை பயன்படுத்துதல், எலெக்ட்ரானிக் வாகன கொள்கை, சுகாதாரத்துறையில் டுரோன் பயன்பாடு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.